கணவனுக்கு பிடிக்குமே என நாயை பரிசாக வாங்கி வந்த மனைவிக்கு, கணவனின் செயலால் என்ன செய்வதென தெரியாமல் போயுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் முக்கியமான ஒரு விஷயத்தை விளம்பரப்படுத்தும் அளவுக்கு அப்பெண் சென்றிருக்கிறார்!
அதன்படி மனைவி ஒருவர் தனது கணவனுக்காக ஜெர்மென் ஷெர்ப்பெர்ட் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றினை 20,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். அதற்கு லியோ என பெயரும் வைத்திருக்கிறார்.
ஆனால் அந்த கணவனோ நாயை கண்டாலே ஒவ்வாமையுடன் இருந்திருக்கிறார். இதனால் கணவனையும் நாயையும் ஒரே வீட்டில் வைத்திருக்க முடியாமல் திணறிய அந்த மனைவி இருவரில் ஒருவரை விட்டுக்கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்.
பெரும்பாலானோர் கணவனுக்கு பதில் நாயைதான் விற்க அந்த பெண் முடிவெடுத்ததாக எண்ணியிருக்கக் கூடும். ஆனால் சற்று மாறுதலாக அந்த பெண் தனது கணவரையே தத்து கொடுக்க முற்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அமித் அரோரா என்பவரது ட்விட்டர் பதிவில், “அவசரமாக ஒரு வீடு தேவைப்படுகிறது. இதுதான் ஜெர்மென் ஷெப்பெர்ட் நாய் லியோ. இரண்டு மாதம்தான் ஆகிறது. என்னுடைய தோழி சோனாலி அவரது கணவருக்கு பரிசாக வழங்க இதை 20,000-க்கு வாங்கினார்.
ஆனால் கணவர் கவுரவுக்கு நாய் என்றால் அலெர்ஜி என பிறகுதான் சோனாலிக்கு தெரிய வந்தது. தற்போது சோனாலி அவருக்காக புது வீடு தேடிக் கொண்டிருக்கிறார். கவுரவுக்கு 29 வயதுதான் ஆகிறது. பைக் ஓட்டுவார், சமைப்பார், புத்திசாலியானவர். குறிப்பாக ஹேண்ட்சமாக இருப்பார்.” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் கவுரவுக்கு பதிலாக, லியோவை வேண்டுமென்றால் வாங்கிக் கொள்கிறோம் என போட்டாப்போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி, “கவுரவுக்கு இவ்வளவு செலவழிக்க முடியாது. நாங்கள் லியோவை தத்தெடுக்க விருப்பப்படுகிறோம்” என்ற கமென்ட்டுக்கு, அமித் அரோரா, “சோனாலிக்கு கவுரவை தத்து கொடுக்கதான் விருப்பமாக இருக்கிறது” என கிண்டலாக பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவுகள் கிண்டலான பதிவாக இருந்தாலும், உண்மையிலேயே சோனாலி தனது கணவனை நாய்க்காக தத்து கொடுக்க விரும்பினாரா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் இணையவாசிகள் குழம்பி போயிருக்கிறார்கள்.