தனது பிறந்த நாளில் தனது தொண்டர்கள் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நடிகர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை "வறுமை ஒழிப்பு தினமாக" கடைப்பிடித்து வருகிறேன். அதன்படி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறார்கள். வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
இதுவரை உலகம் கண்டிராத புதிய வைரஸான கொரோனா வைரஸ் தொற்றால் பல ஆயிரம் உயிர்களை நாம் இழந்துள்ளோம். கொரோனா ஊரடங்கு, போக்குவரத்து முடக்கம், வேலையின்மை, பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வரும் வேளையில், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி, கழக தொண்டர்களும், பொதுமக்களும் அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.
தற்போது கொரோனா கால கட்டம் என்பதால் இந்த முறை சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கேப்டன் விஜயகாந்த் கிராமப்புற சுகாதார திட்டத்தை, வறுமை ஒழிப்பு தினத்தில் கடைபிடிக்க வேண்டும்.
மக்களின் முதுகெலும்பான கிராமத்தில் இருந்து இத்திட்டம் தொடங்கப்படும்.ஒரு ஒன்றியத்தில் முன்மாதிரியாக ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து, கிராமங்களை தூய்மைப்படுத்த வேண்டும்.சோடியம், ஹைப்போ குளோரைட் அல்லது பிளீச்சிங் பவுடரை நீரில் கலந்து, கிராம தெருக்களில், கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் கபசுர குடிநீர், முகக்கவசம், கையுறை, சோப்புகள், கிருமி நாசினி, மாணவர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் முதியோர்களுக்குத் தேவையானப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், இலவச கணினி பயிற்சி மையம் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களை பல ஆண்டுகளாக கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
அதேபோல், இந்தாண்டும் கொரோனா இருக்கும் காலகட்டத்தில் தனது பிறந்தநாளன்று வறுமை ஒழிப்பு தினமாக இந்த திட்டங்களை செயல்படுத்துங்கள். எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு இந்தாண்டும் 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.