மெட்ரோ சிட்டிகளில் கஷ்டப்பட்டு வங்கியில் கடன் வாங்கியாவது சொந்தமாக கூட வீடு வாங்கி விடலாம். ஆனால் வாடகைக்கு வீடு கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கும். அதுவும் வீடு கிடைப்பதை காட்டிலும் ஹவுஸ் ஓனர்கள் கேட்கும் கேள்விகளும், விதிக்கும் கெடுபிடிகளுக்கும் பதில் சொல்வதே பெரும் போராட்டமாகிவிடும்.
இது போதாதென உளவியல் ரீதியான பாதிக்கும் வகையில் சமூக அந்தஸ்து பற்றி கேட்பதும், குறிப்பிட்ட சமூக பிரிவினருக்கே வாடகைக்கு வீடு கொடுப்போம் என்று விதண்டாவாதம் செய்யும் உரிமையாளர்களும் ஏராளமாக இருக்கவே செய்கிறார்கள். இது மாதிரியான நிகழ்வுகள் குறித்த பதிவுகளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டும் வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவின் தொழில்நுட்ப நகரமாக இருக்கக் கூடிய பெங்களூருவை சேர்ந்த நபர் பகிர்ந்த பதிவுதான் நெட்டிசன்களிடையே வைரலானதோடு வீடு தேடும் போது அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.
அதில், பெங்களூருவின் இந்திரா நகர் பகுதியில் கவுதம் என்பவர் வீடு தேடி அலைந்திருக்கிறார். அதே சமயத்தில் இடைத்தரகர்களிடமும் பேசி வைத்திருக்கிறார் கவுதம். வாடகைக்கு வீடு பார்ப்பது குறித்து அந்த தரகர் வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு அவரது ப்ரோஃபைலை அனுப்பும்படி கூறியதற்கு ஏன் என கேட்டதற்கு ஹவுஸ் ஓனர் கேட்பதாக கூறியிருக்கிறார்.
உடனே கவுதமும் தன்னுடைய லிங்க்ட் இன் ப்ரோஃபைலை அனுப்பியிருக்கிறார். இதோடு விடாமல், உங்களை பற்றிய விவரங்களை ஒரு ரைட்டப்பாக எழுத முடியுமா என்றும் கேட்டு மெசேஜ் செய்திருக்கிறார் அந்த தரகர். இந்த வாட்ஸ் அப் உரையாடலை ட்விட்டரில் பகிர்ந்து 12வது நாளாக வாடகைக்கு வீடு தேடும் படலம் தொடர்கிறது என கவுதம் குறிப்பிட்டிருகிறார்.
இதனைக் கண்ட பல நெட்டிசன்களும், “இந்த மாதிரி பெங்களூருவில் பல சம்பவங்கள் நடக்கிறது. முறையாக வாடகை கொடுப்பதற்கு தயாராக இருந்தாலும் வீடு கிடைப்பது சிரமமாகவே இருக்கிறது” என்றும் “நல்லவேளை உங்கள் பயோ டேட்டாவை கேட்காமல் போனாரே” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.