அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் வாக்களிக்க 4 ஆம்னி பேருந்துகளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
தகுதி நீக்கம், உறுப்பினர்கள் மறைவு காரணமாக தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்காக இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை முதலே அரவக்குறிச்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இன்று காலை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை வரவேற்க, திமுக தொண்டர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே, 300 மீட்டர் தொலைவில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ’நாங்கள் வாக்கு சாவடியில் இருந்து முந்நூறு மீட்டருக்கு வெளியேதான் நிற்கிறோம். இங்கிருந்து ஏன் வெளியேற வேண்டும். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு?’’ என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர். பின்னர் திமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பள்ளப்பட்டி அண்ணா நகரில் வாக்களிக்க 4 ஆம்னி பேருந்துகளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேருந்துகளில் வந்த பயணிகளிடம் வாக்காளர் அடையாள அட்டையை கைப்பற்றி வந்தவர்கள் வாக்காளர்களா என்று விசாரணை நடத்தப்பட்டது. தங்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் அலைக்கழிப்பதாக வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.