முதுகுளத்தூரில் தலையில் குல்லா, காவி வேட்டி, சிலுவை அணிந்தும், கேன்களில் பெட்ரோல் நிரப்பி மாலையாக அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய இந்திய லங்காடி அணியின் முன்னாள் கேப்டன் வந்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு போட்டியிட இந்திய லங்காடி அணியின் முன்னாள் கேப்டன் தேவசித்தம், காவி வேட்டி அணிந்து, தலையில் குல்லாவுடன் சிலுவை அணிந்து சிறிய கேன்களில் பெட்ரோல் நிரப்பி அதனை மாலையாக அணிந்து முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
’அனைத்து மதங்களும் அன்பை போதிக்கின்றன ஏன் நமக்குள் வேறுபாடு. இந்தியாவின் கடன் சுமை எவ்வளவு உள்ளது’ உள்ளிட்டவை அடங்கிய வாசகங்கள் எழுதி அதை உடம்பில் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
இதையடுத்து முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் கொண்டு வந்த பொருட்களை பறிமுதல் செய்த பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள அனுமதித்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய பத்தாயிரம் ரூபாய் சில்லறையாக கொண்டு வந்திருந்தார். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர் கொண்டு வந்த ஆவணங்களை பரிசோதனை செய்தபோது முறையான ஆவணங்கள் கொண்டு வராததால் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குரூப்-1 வேலைவாய்ப்பு வழங்க உத்தரவாதம் கொடுத்திருந்தார். தற்போது சாதிமத அரசியலை ஒழித்து மனிதநேய அரசியலை நிலைநாட்ட வேண்டும். எல்லோரும் அவரவர் மனம் கவர்ந்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள். அதேபோல 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.