நீலகிரி மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் கிராம மக்கள் டார்ச் லைட் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் தேயிலை எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சென்று இரவு 10 மணிக்கு மேல் தான் வீடு திரும்ப வேண்டிய சூழலில் உள்ளனர். இவர்கள் வரும் வழியில் மின் வசதி இல்லாத காரணத்தினால் டார்ச் லைட்டை பயன்படுத்தி வனப்பகுதி வழியாக வீடுகளுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிக் காரணமாக டார்ச்லைட் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சியின் சின்னமாக இருப்பதால் அதனை பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இவர்கள் தீ பந்தம் கொளுத்தி வனப்பகுதிகளை கடந்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் தீ பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் தனது எதிரே வரும் வன விலங்கு குறித்து தெரியாமல் இவர்கள் அச்சத்துடனே வீட்டுக்குச் சென்று சேர வேண்டிய சூழல் உள்ளது. எனவே இரவு 10 மணிக்கு மேல் ஆதிவாசி கிராமங்களில் உள்ளவர்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்பவர்களிடம் தேர்தல் அதிகாரிகள் கெடுபிடி காட்டாமல் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாவும் உள்ளது.