மணப்பாறையில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்த வங்கி கேஷியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம். மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராகப் பணிபுரிகிறார். இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தாட்சர் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணமான நாளிலிருந்தே எட்வின் ஜெயக்குமார், தன் மனைவியுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்துவந்துள்ளார். தொடர்ந்து அவர், செல்போனிலேயே மணிக்கணக்காக மூழ்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எட்வின் ஜெயக்குமாரின் மனைவி தாட்சர் குடும்பத்தாரிடம் 50 பவுன் தங்க நகை கேட்டு துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தாட்சர், கணவரின் பீரோவை சோதனை செய்துள்ளார். இதில் பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் சிக்கியுள்ளன. அந்த செல்போன்களில், பல்வேறு பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் இருப்பது போன்ற 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு தாட்சர் அதிர்ந்துபோனார்.
பின்னர் இதுதொடர்பாக டிஐஜி லோகநாதனிடம் புகார் கொடுத்தார். தொடர்ந்து போலீஸாரின் விசாரணையில் எட்வின் ஜெயக்குமார், வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களைத் தன் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் தவறாக நடந்து கொண்டதுடன் அதை வீடியோவாக எடுத்து வைத்து ரசித்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். ஜெயக்குமார், அவரின் குடும்பத்தாருடன் திருச்சி, ஸ்ரீரங்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் மாறி மாறி பதுங்கி இருப்பதாகத் தகவல் தெரியவே, அதுகுறித்த தீவிர விசாரணையில் போலீஸார் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை தஞ்சை மாவட்டம், வல்லத்திலிருந்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த எட்வின் ஜெயக்குமாரை தேடிவந்த நிலையில் நேற்று திருச்சியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.