வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தும் வகையில் ‘எஸ்.எம்.எஸ்’ என்ற மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆளும் அ.தி.மு.க -வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எஸ்.எம்.எஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவில் தேர்தல் பிரச்சார உத்திகளை அமைத்துக் கொடுக்கும் அரசியல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு,முதல்வர் பழனிசாமியின் மகன் மிதுன் குமார் மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி கே.என். சத்தியமூர்த்தி ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
இவர்கள் மூவரும் இணைந்து வரும் 2021 தேர்தலில் முதல்வர் எடப்பாடியை முன்னிலைப்படுத்த வேண்டுமென்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்சி சாராத நபர்களின் உதவியோடு கள ஆய்வினை மேற்கொண்டு அதற்கேற்றபடி வியூகங்களை வகுத்து வருகிறார் சுனில். அதே நேரத்தில் உளவுத்துறை உள்ளீட்டு தகவல்களை கொடுத்து வருகிறார் சத்தியமூர்த்தி என கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த எஸ்.எம்.எஸ் குழு தங்களது பணிகளை துவங்கிவிட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. அதன் மூலம் அ.தி.மு.க -வின் ஐ.டி பிரிவு முழுவதுமாக இந்த குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அண்மைய காலமாக சமூக வலைத்தளங்களில் அ.தி.மு.க தலைவர்கள் பகிரும் பதிவுகளுக்கு வரும் கமெண்ட்டுகளை இந்த குழு கட்டுப்படுத்தி வருவதே அதற்கு சான்றாக சொல்லப்படுகிறது. அதன் மூலம் முதல்வருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகார பலத்தை அதிகரிக்கவே இந்த எஸ்.எம்.எஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தலைமையில் மேலும் இரண்டு குழுவை முதல்வர் தரப்பு அமைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.