டிரெண்டிங்

சாலையில் ஓடிய முட்டை கழிவுகள் - தயங்காமல் வெறும் கைகளால் சுத்தம்செய்த பெண் காவலர்..!

சாலையில் ஓடிய முட்டை கழிவுகள் - தயங்காமல் வெறும் கைகளால் சுத்தம்செய்த பெண் காவலர்..!

kaleelrahman

விரைவாக செயல்பட்ட பெண் காவலரை பாராட்டிய பொதுமக்கள்

மதுரையில் சாலையில் விழுந்து உடைந்த முட்டையால் நடந்த தொடர் விபத்தை தடுக்க, உடைந்த முட்டையின் கழிவுகளை தனது கைகளால் அள்ளி அகற்றிய பெண் போக்குவரத்து தலைமை காவலரின் செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

<
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள தாமரை தொட்டி போக்குவரத்து சந்திப்பின் அருகே புதூரில் இருந்து தல்லாகுளம் நோக்கி விற்பனைக்காக 5000 க்கும் மேற்பட்ட முட்டைகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றிச்சென்றனர். எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோவிற்கு முன்னே சென்ற வாகனம் திடீரென பிரேக் அடித்து நிறுத்தியதால், ஓட்டுநர் ஆட்டோவை உடனே நிறுத்த முயற்சித்துள்ளார். இதனால் ஆட்டோவில் ஏற்றிச் சென்ற முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து சாலையில் பசை போல் ஓடியது.

சாலையில் விழுந்து உடைந்த முட்டைகளை ஆட்டோ ஓட்டுநர் அப்புறப்படுத்தாமல் சென்றுவிட்டார். அதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பலர் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாயினர். இதை அந்த இடத்தில் இருந்த போக்குவரத்து சிக்னல் பணிக்குவந்த போக்குவரத்து பெண் தலைமை காவலர் அதிர்ச்சயடைந்தார்.


பெரும் விபத்து நடக்கும் முன் தடுக்க வேண்டும் என்று போக்குவரத்து பெண் தலைமை காவலர் மீனா, சாலையில் உடைந்து கிடந்த முட்டை கழிவுகளை வெறும் கைகளால் அள்ளி அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஆயுதப்படை ஆண் காவலர், பெண் காவலரின் செயலைக் கண்டு அவரும் முட்டை கழிவுகளை அகற்ற உதவினர்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விரைந்து செயல்பட்ட பெண் போக்குவரத்து தலைமை காவலரை அவ்வழியே சென்ற பொது மக்கள் பாராட்டிச் சென்றனர். இதை அறிந்த மதுரை மாநகராட்சி ஆணையர் விசாரணைசெய்து முட்டை விழுந்து உடைந்த பகுதியை தண்ணீர் அடித்து சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி தண்ணீர் அடித்து சுத்தம் செய்யப்பட்டது.