டிரெண்டிங்

தற்போதைய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு சாத்தியம் குறைவு - திருமாவளவன்

தற்போதைய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு சாத்தியம் குறைவு - திருமாவளவன்

webteam

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் அதிமுக கட்சியிலேயே இருப்பதால் ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என ஆளுநர் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருவல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் 4 பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறினார்.

அதுமட்டுமின்றி தமிழக அரசு செயல்படாத நிலையில் உள்ளதாக குறைகூறிய அவர், மக்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருப்பதகாவும் சுட்டிக்காட்டினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசும் முன்னரே, சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கூறிய 19 சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என ஆளுநர் தெரிவித்ததாக கூறினார்.

அத்துடன் 19 சட்டமன்ற உறுப்பினர்களும் வேறு கட்சியில் இணைந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்றும், அதிமுகவில் இருந்து 19 சட்டமன்ற உறுப்பினர்களும் நீங்காமல் இருப்பதால் சட்ட நடவடிக்கை எடுப்பது சிரமத்திற்குள்ளதானது என்றும் ஆளுநர் குறிப்பிட்டதாக திருமாவளவன் தெரிவித்தார். தற்போதைய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சாத்தியம் குறைவு எனவும் அவர் கூறினார்.