டிரெண்டிங்

பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் - தடியடி நடத்திய போலீசார்

பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் - தடியடி நடத்திய போலீசார்

webteam

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதியான இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தின் 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறும் நாளன்று அரசுகள் பொது விடுமுறை விட வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று பொதுவிடுமுறை என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்தார். 

இதையடுத்து தேர்தலில்போது தனது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட பல்வேறு தரப்பு மக்களும் வெளியூர்களிலிருந்து சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். மேலும் தீபாவளி, பொங்கல், தேர்த்ல் என முக்கியமான நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்குவதும் வழக்கம். 

இந்நிலையில், நேற்று முதலே சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்தனர். ஆனால் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்பதால் நீண்ட நேரம் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காத்து கிடக்க வேண்டியுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். 

4 மணி நேரத்திற்கு மேலாக காத்துகிடப்பதாகவும் காவல்துறையும் கூட்ட நெரிசலை அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து பேருந்துகள் இல்லாததை கண்டித்தும் போலீசாரின் அலட்சிய போக்கை கண்டித்தும் பயணிகள் கோஷங்களை எழுப்பினர். இதனால் போலீசார் அங்கிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் சென்று கொண்டிருக்கின்றனர். பயணிகளை ஒழுங்குபடுத்தி போலீசார் பேருந்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.