நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் பள்ளி மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மூலம் பலர் பயன் பெற்று அரசு வேலையில் சேர்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள வடுகச்சிமதில் ஊரை சேர்ந்தவர் ராமையன் என்பவரின் மகன் கண்ணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10ஆம் வகுப்பு படிப்பை முடிக்காமலேயே முடித்ததாக கூறிய இவர், (BSF) இந்திய எல்லை பாதுகாப்பு படையில் இணைவதற்காக உடல் தகுதி தேர்வை முடித்து இறுதிகட்ட தேர்வு வரை சென்றுள்ளார். ஆனால் இறுதி கட்ட தேர்வில் சொற்ப மதிப்பெண்ணில் வேலை கிடைக்காமல் போயுள்ளது.
இந்த நிலையில் தன்னைப்போல் அந்த பகுதியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவர்களை தேர்ச்சி அடைந்ததாக சான்றிதழ் தயார் செய்து கொடுப்பதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை அடுத்து காவல்துறை தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். விசாரணையில் இவர் போலி சான்றிதழ் வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து போலி சான்றிதழை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் நிலையத்தில் அவர் மீது IPC 420, 471 என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 420 பிரிவு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு. ஆனால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்த நபர் ஸ்டேஷன் வழங்கிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தனிப்படை மூலம் பிடிக்கப்பட்ட போலி சான்றிதழ் தயாரித்த நபரிடம் விசாரணை செய்தால் அவர் மூலமாக போலி சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்த நபர்களின் விவரமும் எத்தனை பேருக்கு போலி சான்றிதழ் வழங்கினார் என்ற விபரமும் தெரியவரும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைது செய்த ஒருமணி நேரத்திலேயே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பொதுவாக அரசு சான்றிதழ் மற்றும் அரசு ஆவணங்களை திருத்தம் செய்தாலோ அல்லது தயாரித்தாலோ அது சம்பந்தமாக அந்த ஏரியாவில் உள்ள வி.ஏ.ஓ அல்லது காவல்துறை அதிகாரி புகாரின் பேரில்தான் வழக்குப் பதிவு செய்யப்படும். ஆனால் தற்போது கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக கண்ணனின் உறவினரிடமே புகார் வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த ஒரு நிறுவனத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப் படுகின்றது. கண்ணன் அந்த நிறுவனத்திற்கு புரோக்கராக மட்டுமே இருந்துள்ளார். ஆகவே உடனடியாக இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
போலி சான்றிதழ் தயாரித்தது குறித்து குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் சான்றிதழ் வாங்கி கொடுத்ததாகச் சொல்லப்படும் நபர் இறந்து விட்டார் அவரது இன்ஸ்டிடியூட் மூலம் வேறு யாருக்கேனும் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கப் பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை செய்ய தனிப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.