அதிமுகவுக்கு அரசியலில் நிரந்தர எதிரி திமுக எனவும் நிரந்தர துரோகி டிடிவி தினகரன் எனவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் ஒரு துரோகி எனவும் அவர் அதிமுகவை உடைக்க சதி செய்து கொண்டிருக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும் எனவும் மக்கள் விரும்பாத திட்டங்களை இந்த அரசு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
எடப்பாடி அரசு சுயநலமாக ஆட்சி நடத்துவதாகவும் வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் என்ன மைசூர் மகாராஜாவா? எனவும் அதிமுகவுக்கு அரசியலில் நிரந்தர எதிரி திமுக, நிரந்தர துரோகி டிடிவி தினகரன் எனவும் தெரிவித்தார்.
டீக்கடை வைத்து உழைத்து தான் முன்னுக்கு வந்தேன் எனவும் பிரதமர் கூட டீ விற்றுதான் முன்னுக்கு வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
டிடிவி அணியினருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது எனவும் ஆனால் அவர்கள் வாய்ப்பை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் 27 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருப்பது அதிமுகதான் எனவும் அதிமுகவை கைப்பற்ற ஒரு குடும்பம் சதித்திட்டம் தீட்டியதை தொண்டர்கள் முறியடித்துவிட்டதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நியூட்ரினோ திட்டத்துக்கு தற்போது வரை அரசு அனுமதி வழங்கவில்லை எனவும் நியூட்ரினோ திட்டத்துக்கு முதலில் அனுமதி கொடுத்தது திமுகதான் எனவும் குறிப்பிட்டார். மக்களுக்கு எதிரான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தாது எனவும் அரசுக்கு துரோகம் செய்த 18 பேரும் இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.