திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காபட்டியை சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மனைவி ராஜலட்சுமி. இவர், திண்டுக்கல்லில் உள்ள முத்தூட் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் 2016ஆம் ஆண்டு தனது வீட்டை அடமானமாக வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையில் ரூபாய் 6.5 லட்சம் வரை அர்ஜுன் திருப்பி செலுத்தி உள்ளார்.
மீதமுள்ள கடனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நிதி நிறுவனம் கடனை திரும்பச் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. ஆனால் அர்ஜுனால் மேலும் பணத்தை செலுத்த முடியவில்லை. இதனிடையே முத்தூட் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியது.
இதனை அடுத்து அர்ஜுன் முத்தூட் நிறுவனத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கும் சரிவர நடைபெறாத நிலையில் மனமுடைந்த அர்ஜுன், வீடு பறிபோகும் நிலையில் இருந்ததால் இன்று திண்டுக்கல்லில் உள்ள முத்தூட் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்றுவிட்டு வந்தாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விஷம் அருந்திய நிலையில் வந்த அர்ஜுனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது அவர் விஷம் அருந்தி உள்ளதாக தெரிவித்ததோடு திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அர்ஜுன் பரிதாபமாக உயிரிழந்தார். தேனியில் இருக்கும் அவரது மனைவிக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.