டிரெண்டிங்

தஞ்சாவூர் அமமுக வேட்பாளரின் 2வது வேட்பு மனு வாங்க மறுப்பு

webteam

தஞ்சாவூர் தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ரங்கசாமியின் 2 வது வேட்பு மனுவை பெற தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ ரங்கசாமி போட்டியிடுகிறார். இவர் இன்று இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வந்திருந்த நிலையில் முதலில் தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின் இரண்டாவதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வந்தபோது, வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது மணி 3 என்பதால் அவருக்கு பத்தாம் நம்பர் டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. 

அப்போது வேட்பாளர் ரங்கசாமிக்கு சற்று சோர்வாக இருந்ததால் வெளியில் இருக்கும் படியும் மனுவைத் தாக்கல் செய்யும்போது அழைப்பதாக தேர்தல் அலுவலர்கள் கூறி உள்ளனர். ஆனால் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது வேட்பாளர் இல்லை எனக்கூறி தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் அந்த மனுவை வாங்க மறுத்து விட்டார். 

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வழக்கறிஞர் நல்லதுறை அளித்த பேட்டியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இரண்டாவது வேட்புமனுவை வேண்டுமென்றே வாங்க மறுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும்  இந்தத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடக் கூடாது என்பதற்காக சதி செய்வதாகவும், முதலாவது மனுவையும் நிராகரிக்க முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பின் நேர்மையற்ற முறையில் உள்ள தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் தஞ்சாவூர் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்தவும் வலியுறுத்தினார்.