டிரெண்டிங்

''மிஷன் சக்தி விதிமீறலில்லை'' : புகாரை தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

''மிஷன் சக்தி விதிமீறலில்லை'' : புகாரை தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

webteam

பிரதமர் நரேந்திர மோடி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்திருந்த தேர்தல் விதிமீறல் புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 27ஆம் தேதி நாட்டு மக்களிடையே விண்வெளித்துறை பற்றி உரையாற்றினார்.பிரதமர் மக்களுக்கு ஆற்றிய உரையில், விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். விண்வெளியில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தியை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இச்சாதனை முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் நிகழ்த்தியதாகவும், இந்தச் சாதனையை படைத்துள்ள விஞ்ஞானிகளைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சாதனை மூலம் எலைட் சூப்பர் கிளப் எனப்படும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்திருப்பதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். 

பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து, விண்வெளியில் இந்தியா ஆற்றிய சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள், அத்துடன் தேர்தல் நேரத்தில் பிரதமர் ஆற்றிய உரை குறித்தும் கேள்வி எழுப்பினர். அத்துடன், பிரதமர் மோடியின் உரை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திலும் புகார் கடிதம் அளித்தார்.

இதனையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் அவருக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், புகார் மனு குறித்து ஆராயப்பட்டதாகவும், பிரதமர் மோடியின் பேச்சு விதிமீறலாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.