டிரெண்டிங்

சொத்தை அபகரித்த மூத்த மகன்... அப்பாவின் உடலை வைத்து போராட்டம் நடத்திய இளைய மகன்..!

kaleelrahman

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இறந்த தந்தையின் உடலை அவரது சொந்த வீட்டில் வைத்து இறுதி காரியம் செய்ய மூத்த மகன் அனுமதிக்கவில்லை என்று கூறி தந்தையின் உடலை அடக்கம் செய்யாமல் உறவினர் வீட்டில் வைத்து இரண்டாவது மகன் தொடர்ந்து இரண்டு நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டை வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருக்கு முத்துக்குமார், குபேந்திரன் என்ற 2 மகன்கள் உள்ள நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மூத்த மகன் முத்துக்குமார் ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்டு தன்னை வீட்டைவிட்டு விரட்டியதாக பழனியப்பன் தெரிவித்திருந்தார்.

இதனால் வசிக்க வழியின்றி தவிக்கும் தனக்கு அரசு உதவி செய்வதோடு மூத்த மகனால் மிரட்டி எழுதி வாங்கப்பட்ட சொத்துக்களை மீட்டு தரவேண்டும் எனவும் பழனியப்பன் புதுக்கோட்டை ஆட்சியர், கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடந்த 7 மாத காலமாக புகார்மனு அளித்து வந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பழனியப்பன் தனியே ஒரு குடிசையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பழனியப்பன் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். ஆனால் அவரின் சடலத்தை அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு செல்ல மூத்த மகன் முத்துக்குமார் அனுமதிக்காததால் எங்கே வைத்து இறுதி காரியங்கள் செய்வது என்று தெரியாமல் இளைய மகன் குபேந்திரன் உள்ளிட்ட உறவினர்கள் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 


இதனையடுத்து நேற்று மாலையிலிருந்து இறந்த பழனியப்பனின் சடலத்தை அடக்கம் செய்யாமல் அருகே உள்ள பழனியப்பனின் தம்பி வீட்டில் சடலத்தை வைத்து அவரது இளைய மகன் குபேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். தனது தந்தைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனது அண்ணன் முத்துக்குமார் ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதோடு தற்போது தந்தையின் சடலத்தை கூட வீட்டிற்குள் கொண்டு செல்ல அனுமதிக்காமல் மிரட்டி வருகிறார்.

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தனது தந்தையை மிரட்டி எழுதி வாங்கிய சொத்துக்களை முறையாக அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தால் மட்டுமே சடலத்தை அடக்கம் செய்வோம் என்றும் அவரது இரண்டாவது மகன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து இரண்டாவது நாளாக தந்தையின் சடலத்தை அடக்கம் செய்யாமல் பழனியப்பனின் இரண்டாவது மகன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கிராம மக்கள் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து இன்று மாலை பழனியப்பனின் உடல் கிராமத்தார் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.