டிரெண்டிங்

தறிகெட்டு ஓடும் திமுக ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போடவேண்டும் - ஓபிஎஸ்

தறிகெட்டு ஓடும் திமுக ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போடவேண்டும் - ஓபிஎஸ்

kaleelrahman

தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முதலில் போட வேண்டியது மூக்கணாங்கயிறு. மூக்கணாங்கயிறு போட்டு இழுத்தும் திருந்தவில்லை என்றால் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் பேசினார்.

“கடந்த 50 ஆண்டுகளாக தொண்டர்களால் இயக்கப்படும் இயக்கம் அதிமுக. ஐம்பதாண்டு காலம் யாராலும் அசைக்க முடியாத இந்த இயக்கத்தை தாங்கிப் பிடித்து நிற்கும் தொண்டர்கள் போட்டியிடும் தேர்தல் இந்த உள்ளாட்சித் தேர்தல். அவர்களை வெற்றியடையச் செய்வது தலையாய கடமை. அனைவரும் ஒற்றுமையோடு நம்மை நம்பி, நமது கழகத்தை நம்பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டியது அனைவரின் கடமையும் குறிக்கோளும் ஆகும்.

இதற்காக அனைவரும் வீதி வீதியாகச் சென்று வீடு வீடாக சென்று அம்மாவின் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் செய்யமுடியாத, செய்ய இயலாத திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு ஒரு மூக்கணாங்கயிறு போட வேண்டும். இந்த மூக்கணாங்கயிறு எதற்காகவென்றால் தமிழகம் முழுவதும் அதிமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை பெற வேண்டும்.

நான் சென்று வந்த மாவட்டங்களில் எல்லாம் அதிமுகவே வெற்றி பெறும் என தாய்மார்கள் உட்பட அனைவரும் கூறி வருகின்றனர். பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி விட்டார்கள் என்பதே மக்களின் குரலாக இருக்கிறது. மக்களின் குரலே மகேசனின் குரல். எனவே வருகின்ற தேர்தல் எடைபோட்டு பார்க்க வேண்டிய தேர்தல். மக்கள் நீதிபதியாக இருந்து யார் ஆட்சி நல்லாட்சி? யார் ஆட்சி மோசமான ஆட்சி? என்பதை நிர்ணயிக்க வேண்டும்.

வாக்களிக்க போகும்போது திமுக அரசு வழங்கிய வெல்லத்தையும், மிளகு எனக்கூறிக் கொடுத்த பப்பாளி விதைகளையும் நினைத்துக்கொண்டே வாக்குச்சாவடிகளுக்கு செல்லுங்கள். ஆட்டோமேட்டிக்காக நமது கை இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பட்டனை அழுத்தும். இந்த நேரத்தில் இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம், தறி கெட்டு ஓடிக்கொண்டிருக்கின்ற திமுக ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போட்டு இழுக்கப் பார்க்கிறோம். அப்படியும் திருந்தவில்லை என்றால் இனிவரும் எந்த தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இந்தாலும் மக்களவை தேர்தலாக இருந்தாலும் அவர்களை வீட்டிற்கு அனுப்புவதை தவிர வேறு வழியே இல்லை. அதை உருவாக்கும் தேர்தலாக இந்த தேர்தலாக இந்த உள்ளாட்சித் தேர்தல் அமைய வேண்டும்” என்று பேசினார்.