காவிரிக்காக திமுக போராடவில்லை, கூட்டணிக் கட்சிகளை சேர்க்கவே போராடுகிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திமுக நடத்தும் நடைபயணம் பெங்களூருவை நோக்கி அமைந்திருக்க வேண்டும் என்றும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகாவில் மாற வேண்டும் என்று விரும்புவதாகக் குறிப்பிட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை ஸ்டாலின் வலியுறுத்துவாரா என்ற அவர், திமுகவின் கறுப்புக் கொடி போராட்டம் பிரதமருக்கு எதிரானதல்ல; தமிழர்களுக்கு எதிரானது என்றும் சாடினார். காவிரி விவகாரத்தை திமுக கையில் எடுத்து இருப்பது கூட்டணிக் கட்சிகளை சேர்ப்பதற்காகவே என்றும் அவர் குற்றம் சாட்டினார்.