டிரெண்டிங்

வெற்றிகளை குவித்த சுயேச்சைகள்... 20 ஆண்டுகளில் நிலை என்ன?

வெற்றிகளை குவித்த சுயேச்சைகள்... 20 ஆண்டுகளில் நிலை என்ன?

rajakannan

ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்த போட்டியிட்டாலே போதும், வெற்றி, தோல்வி பற்றிக் கவலையில்லை எனக் களம் இறங்குகிறார்கள் சுயேச்சை வேட்பாளர்கள். இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் சுயேச்சைகளின் நிலை பற்றி இப்போது பார்க்கலாம்.

1951-52 முதல் மக்களவைத் தேர்தலை பொருத்தவரை 533 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டு, அதில் 37 பேர் வெற்றிபெற்றனர். 1957 தேர்தலில் 481 பேர் போட்டியிட்டு 42 பேர் வெற்றி பெற்று அசத்தினர். இதுதான், சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற அதிகபட்ச வெற்றியாக உள்ளது. 

பின்னர், 1962இல் 479 வேட்பாளர்கள் போட்டியிட்டு 20 பேரும், 1967இல் 520 பேர் போட்டியிட்டு 35 பேரும் வெற்றி வாகை சூடினர். 1971இல் முதல் முறையாக ஆயிரத்துக்கும் அதிகமான சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் 1134 வேட்பாளர்கள் போட்டியிட்டு 14 பேர் மட்டும் வெற்றி பெற்றனர்.

1971க்கு பிறகு சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி விகிதம் சரிய ஆரம்பித்தது. போட்டியிடும் சுயேச்சைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றாலும், வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே சென்றது. 1977, 1982 ஆகிய ஆண்டுகளில் முறையே 9 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கடைசியாக 1984, 89 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில்தான் முறையே 13, 12 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதன்பிறகு இரட்டை இலக்கு வெற்றியை சுயேச்சைகள் எட்டவே இல்லை. குறிப்பாக, 1991 தேர்தலில் ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். 

1996 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக 10,636 சுயேச்சைகள் போட்டியிட்டனர். ஆனால், 9 வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றனர்.  1998 தேர்தலில் ஆயிரத்து 915 சுயேச்சைகள் போட்டியிட்டதில், 6 பேர் வெற்றி பெற்றனர். 1999ல் ஆயிரத்து 954 சுயேச்சைகள் போட்டியிட்டபோதிலும், 6 பேர் மட்டுமே வெற்றி கண்டனர். 2004 தேர்தலில் 2 ஆயிரத்து 385 சுயேச்சைகள் போட்டியிட்ட நிலையில், 5 பேர் மட்டுமே மக்களவையில் நுழைய முடிந்தது. 

அதிகபட்சமாக 2009 தேர்தலில் 3 ஆயிரத்து 831 பேர் சுயேச்சையாக களமிறங்கிய நிலையில், 9 பேர் வெற்றிவாகை சூடினர். 2014 தேர்தலில் 3 ஆயிரத்து 234 சுயேச்சைகள் போட்டியிட்டு, 3 பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கட்சிகளின் பலம் காரணமாக, சுயேச்சைகள் வெற்றி பெறுவது சவாலானதாக உள்ள போதிலும், ஒரு சில நேரங்களில் ஆட்சி அமைக்கவே ஒன்றிரண்டு பேரின் ஆதரவு தேவைப்படும் நிலையில் சுயேச்சைகளின் பலம் கிடுகிடுவென உயர்வதும் உண்டு.