விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பரப்புரைக்கு வந்த அமைச்சரை வரவேற்க பயன்படுத்தும் மலர் தட்டுகளை வாங்க பொது மக்கள் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் பரப்புரைக்கு வரும்போது மலர்தூவி வரவேற்க கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து மலர்தூவி வரவேற்பதற்காக, அங்கு கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எவர் சில்வர் தட்டுகள் வழங்கப்பட்டது. மலர்தூவி முடிந்தவுடன் தட்டுகளை தாங்களே எடுத்து செல்லலாம் என தெரியவந்தததும். தட்டுகளை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
ஒரு கட்டத்தில் தட்டு தங்களுக்கு கிடைக்காதோ என்ற எண்ணத்தில், தட்டுகளை வைத்திருந்த கட்சியினருடன் சண்டையிட்டு தட்டுகளைபறித்து சென்றனர். சில ஆண்களும் பெண்களுடன் புகுந்து தட்டுகளை வாங்கி சென்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய அதிமுகவினர், அவர்களிடம் இருந்து தட்டுகளை வாங்கி பெண்களிடம் கொடுத்தனர். பின்னர் பெண்கள் அனைவரையும் வரிசையாக நிற்கவைத்து பூக்களை தட்டுகளில் வைத்தனர்.
அமைச்சர் வரும்போது பாதையின் இரண்டு புறமும் திரண்டிருந்த பெண்கள் அவர் வரும் வழியில் பூக்களை தூவி வரவேற்றனர். தட்டுக்காக பொதுமக்கள் சண்டையிட்டது அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.