டிரெண்டிங்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆளுநர் நேரில் ஆறுதல்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆளுநர் நேரில் ஆறுதல்

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் ஏற்கனவே நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ள‌னர். இந்தநிலையில் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற ஆளுநர், விமான நிலைய உள்ளரங்கில்‌ மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஆளுநர், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆளுநர் கேட்டறிந்தார். இதனையடுத்து தூத்துக்குடி பேய்குளம் அருகேயுள்ள கிராமத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த செல்வசேகர் என்பவரின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.  பின்னர் விருந்தினர் மாளிகைக்கு சென்ற ‌அவர் மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின் போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்த பின் அங்கிருந்து புறப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விமான நிலையம் வந்து சென்னை புறப்பட்டார்.