டிரெண்டிங்

திருநங்கைகளுக்கு பசுமைவீடு, பால்பண்ணை ... வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டிய ஆட்சியர்

திருநங்கைகளுக்கு பசுமைவீடு, பால்பண்ணை ... வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டிய ஆட்சியர்

kaleelrahman

திருநங்கைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பல உதவிகளை செய்துவருகிறார்.

திருநங்கைகள் என்றாலே சமூகத்தில் மாறுப்பட்ட கருத்துகளும் பார்வைகளும் இருந்து வருகிறது. இதனை மாற்றியமைக்க அரசு, மற்றும் தன்னார்வ அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாட்டுப்புற கலைஞர்களாக தங்களை மாற்றிக் கொண்டு அதன்மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகயை சேர்ந்த 30 திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், திருநங்கைகள் தங்களது சொந்தக்காலில் நின்று சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை அடையும் வகையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் முயற்சியால் மந்திதோப்பு பகுதியில் பசுமை பால்பண்ணையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்திதோப்பை அடுத்துள்ள சந்தீப் நகரில் 30 திருநங்கைகளுக்கு தலா ரூ 2.10 லட்சம் மதிப்பில் 30 பசுமை வீடுகள், மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ 34.50 லட்சம் செலவில் பால் பண்ணையுடன் கூடிய மாட்டுத்தொழுவம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சோலார் மின்சாரம் அமைத்து கொடுத்து தனிநகராகவே உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருநங்கைகள் 30 பேருக்கும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ 40 ஆயிரம் மதிப்பிலான பசுமாடுகள் வாங்கப்பட்டு அதற்கென தனியாக கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கிருந்து தினமும் சுமார் 300 லிட்டர் பால் ஆவின் நிறுவனத்திற்கு நேரடியாக லிட்டர் ரூ 32க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதன் மூலம் பத்து தினங்களுக்கு ஒருமுறை வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருநங்கைகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் கோவில்பட்டி பிரதான பகுதியில் பால் பொருட்கள் உற்பத்தி மற்றம் விற்பனை செய்வதற்கும் திறன் மேம்பாடு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் முயற்சியால் திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியும் சமூகத்தில் தங்கள் மீதிருந்த பார்வையை மாற்றி தங்களை தொழில் முனைவோர்களாக மாற்றி கொண்டு வருகின்றனர்.