திமுக- காங்கிரஸ் கட்சி இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம், இன்று காலை 10 மணிக்கு கையெழுத்தாகும் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடித்து வந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்தில் நேற்று இரவு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த தினேஷ் குண்டுராவ், தொகுதி பங்கீடு ஒப்பந்தம் காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாகும் எனக்கூறினார். மாநிலங்களவை இடம் கேட்ட நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பேரவைத் தேர்தலில் கூடுதலாக சில இடங்களை ஒதுக்க திமுக முன்வந்ததாகக் கூறப்படுகிறது.