ஓட்டைக் குடிசையில் வசித்துவந்த பார்வை மாற்றுத்திறனாளிக்கு தொண்டு உள்ளங்களை இணைத்து புதிய வீடு கட்டிக்கொடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லபுரம் பகுதியில், ஒரு பாழடைந்த ஓட்டைக் குடிசையில் தனது வயோதிக தாயாருடன் வசித்து வருபவர் பார்வை மாற்றுத்திறனாளியான யோகராஜ். கண்பார்வை குன்றிய நிலையில் அவர், தனது தாயாரை காப்பாற்ற சுற்றுலா தலங்களில் குழந்தைகளுக்கான சோப்பு தண்ணீர் விளையாடும் சாதனம் விற்று பிழைத்து வந்தார்.
கொரோனா பொதுமுடக்கத்தால் அவருடைய சிறிய வாழ்வாதாரமும் கேள்விக்குரியானதையும் மழைக்கு ஒழுகும் அவரது குடிசை வீட்டின் நிலையையும், புதிய தலைமுறை செய்தியில் வெளியிட்டதோடு ஏழ்மையான அவர்களின் நிலையை புதிதாக உதவி ஆட்சியரான சிவகுரு பிரபாகரனின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
அதனை அடுத்து அவர், உள்ளூர் தொண்டு உள்ளங்களை இணைத்து, யோகராஜின் வீட்டை முற்றிலும் இடித்து, புதிதாக வீடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தொண்டு உள்ளங்களின் பொருளாதார பங்களிப்புடன், குறைந்த சம்பளத்தில் பணியாற்றிய கொத்தனார், தச்சர் என பலரின் உதவியுடன் தொடர்ந்து 25 நாட்களில் வீடு கட்டும் பணி முடிந்தது.
புதிய வீடு யோகராஜுக்கு மட்டுமல்லாமல் அவரது வீட்டின் சுவற்றை ஒட்டி அமைந்த மற்றொரு ஏழை பெண்ணுக்கும் சேர்த்து இரண்டு வீடுகளாக கட்டிக் கொடுத்து இரண்டு குடும்பங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளனர்.
பல நல் உள்ளங்களின் உதவியோடு 3 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வீடுகளையும் உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரனோடு உதவி செய்த நபர்களும் இணைந்து, ரிப்பன் வெட்டி, வீடுகளை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த சேவையை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி, மேலும் சில வீடுகள் அப்பகுதியில் இடியும் நிலை உள்ளதாகவும், அதனையும் புதுப்பிக்க உதவ வேண்டுமாய், உதவி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்று உதவி ஆட்சியர் உறுதியளித்து சென்றது, அப்பகுதி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது.