டிரெண்டிங்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - வட்ட செயலாளரை நீக்கி அதிமுக நடவடிக்கை

webteam

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருச்சி 49 வது வட்ட செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. 

திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் செயலாளராக இருப்பவர் செக்கடி சலீம். இவர் அதிமுக வட்ட செயலாளராகவும் உள்ளார். 57 வயதான சலீம் பள்ளியில் படிக்கும் 2 ஆம் வகுப்பு மாணவியை தனது மடியில் அமர வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அப்பகுதி மக்களுடன் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் சலீமை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் மகளிர் காவல் ஆய்வாளர் சித்ரா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தார். 

இந்நிலையில், சலீமை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட திருச்சி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த தில்லை நகர் பகுதி 49 வது வட்ட செயலாளர் செக்கடி சலீமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தெரிவித்துள்ளனர்.