புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூரை சேர்ந்த பழக்கடை வியாபாரி ஒருவர், தனது கடைக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தவறாது புத்தகங்களை பரிசாக வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
யார் இவர்? புத்தகங்களை இலவசமாக வழங்குவதற்கான பின்னணி என்ன? என்பது பற்றி விரிவாக காணலாம்.
தஞ்சாவூரில் உள்ள விளார் ரோடு பகுதியின் பூக்கார தெருவைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவருக்கு வயது 63. பூக்கார தெருவில் உள்ள இவரது வீட்டுக்கு வெளியிலேயே பல ஆண்டுகளாக பழம் மற்றும் ஜூஸ் வகைகளை விற்பனை செய்யும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
காஜா மொய்தீனை அப்பகுதி மக்கள் தோழர் என்றே அழைப்பார்கள். தீவிர கம்யூனிச சித்தாந்தங்களை கடைபிடிப்பதல் தன்னுடைய கடைக்கும் காஜா மொய்தீன் தோழர் பழக்கடை என்றே பெயரிட்டிருக்கிறார்.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் உயிரிழந்ததால் அதிலிருந்து மனதை திசை திருப்புவதற்காக தன்னிடம் இருக்கும் புத்தகங்களை மக்களுக்கு பகிரும் பழக்கத்தை தொடங்கிய காஜா மொய்தீனுக்கு காலப்போக்கில் அது வழக்கமான சேவையாகவே மாறியிருக்கிறது. அதன்படி, தனது கடைக்கு வரும் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக புத்தகங்களை கொடுத்து வருகிறார்.
இது குறித்து பேசியிருக்கும் காஜா மொய்தீன், “புத்தக வாசிப்பை ஊக்குவிக்க ஒரு விழிப்புணர்வாக இருக்கும் பொருட்டு, அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள் மற்றும் தமிழ்-ஆங்கில அகராதி புத்தகங்களையும் வழங்கி வருகிறேன்.” என்றிருக்கிறார்.
தொடர்ந்து பேசியிருக்கும் அவர், “குடும்ப சூழல் காரணமாக 9ம் வகுப்போடு என்னுடைய படிப்பை நிறுத்திவிட்டேன். இருப்பினும் புத்தக வாசிப்பை கைவிடவில்லை. என்னுடைய சிறு வயதின் போது, பூக்கார தெருவில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் என் குடும்பத்தினர் புத்தகங்களை பரிசாக வழங்கினர். அந்த பழக்கம் எனக்கும் தொற்றியது.
எனக்கு திருமணமான பிறகு என் மனைவியையும் படிக்கும்படி ஊக்குவித்தேன். அதன்படி அவர் படித்து பட்டம்பெற்று தற்போது அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். என்னுடைய மகன் வழக்கறிஞராக இருக்கிறார். என் கடைக்கு பழம் வாங்க, ஜூஸ் குடிக்க வருவோரை என்னுடைய குடும்பத்தினராக, நண்பர்களாக கருதியே புத்தகங்களை கடந்த 11 ஆண்டுகளாக வழங்கி வருகிறேன்.
வாடிக்கையாளர்களும் என்னை வெறும் பழ வியாபாரியாக மட்டும் பார்க்காமல் அவர்கள் இல்லத்தில் இருக்கும் உறுப்பினராகவே பாவிப்பார்கள். என்னுடைய இறப்புக்கு பிறகு என் முழு உடலை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு தானமாகவும் கொடுத்திருக்கிறேன். என்னை பொறுத்தவரையில் மனிதர்களும், மனிதமும்தான் முக்கியம். பணம் உள்ளிட்ட மற்றவையெல்லாம் தற்காலிகமானதுதான்” என காஜா மொய்தீன் உணர்ச்சிப்பொங்க நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார்.