டிடிவி தினகரன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து பயமுறுத்த நினைக்கின்றனர் என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீது வழக்கு தொடர்வது ஜனநாயகத்துக்கு ஆபத்தானதாகும். 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததுபோல், தேசத்துரோக வழக்கு பதிவு செய்து துணைப் பொதுச்செயலாளர் தினகரனை பயமுறுத்த நினைக்கின்றார்கள். ஆனால் அது நிச்சயமாக எடுபடாது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் 10 எம்.எல்.ஏக்கள் அல்ல, 20 எம்.எல்.ஏக்களும் தினகரனுடன் தான் உள்ளோம். சில வேளைகளின் காரணமாகவே அவர்கள் ஊர்களுக்கும், தொகுதிகளுக்கும் சென்று வருகிறார்கள். தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு 4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது அதுவரை நாங்கள் ஒன்றாக தான் இருப்போம்” என்று கூறினார்.