டிரெண்டிங்

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லாமல் தொகுதி மக்களை சந்தித்த தம்பிதுரை !

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லாமல் தொகுதி மக்களை சந்தித்த தம்பிதுரை !

Rasus

விராலி மலை சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவான விஜயபாஸ்கர் இல்லாமலேயே, அவரது தொகுதியில் மக்களவை துணை சபாநாயகர் நேற்று பொதுமக்கள் சந்தித்துள்ளார்.

கரூர் மக்களவை தொகுதியில் மொத்தமாக 6 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. அதில் ஒன்றுதான் விராலி மலை. இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான சி.விஜய பாஸ்கர். இவரது தந்தையான சின்னதம்பி மக்களவை தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அதேசமயம் கரூர் மக்களவை தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருப்பவர் தம்பிதுரை. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அத்தொகுதியில் எம்.பியாக இருந்து வருகிறார். வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தம்பிதுரையும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் விராலி மலை சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவான விஜயபாஸ்கர் இல்லாமலேயே அவரது தொகுதியில் மக்களவை துணை சபாநாயகர் நேற்று பொதுமக்களை சந்தித்துள்ளார். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள ராஜாளிபட்டி, நம்பம்பட்டி, தேங்காய்தின்னிபட்டி, கசவனூர், வாரகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் சென்று கோரிக்கை மனுக்களை தம்பிதுரை பெற்றார். அவர் செல்லும் பல கிராமங்களில் குடிநீர் கேட்டு மக்கள் அவரிடம் முறையிட்டனர். தேங்காய் தின்னிபட்டியில் குடிநீர் கேட்டும்,100 நாள் வேலை முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டியும் மக்கள் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கெனவே பலமுறை விராலி மலைக்கு, அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்று குறைகளை கேட்டுள்ள தம்பிதுரை நேற்று விஜய பாஸ்கர் தொகுதியில் அவர் இல்லாமலேயே மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளார். விஜய பாஸ்கரின் தந்தையும் கரூர் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இதனிடையே விராலிமலை அருகே செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “ பாஜகவை ஏற்கெனவே நானும் விமர்சனம் செய்துள்ளேன். ஆனால் அக்கட்சியினரின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் பாஜகவை வரவேற்கிறேன். எங்களது கூட்டணியில் எந்தவித முரண்பாடும் கிடையாது. ஆனால் திமுக வைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அதனை ஒழிக்கவே நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம்” என்றார்.