டிரெண்டிங்

தென்காசி: வாட்ஸ்-அப்பில் வளம்வந்த தபால் வாக்குச் சீட்டு: நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி

தென்காசி: வாட்ஸ்-அப்பில் வளம்வந்த தபால் வாக்குச் சீட்டு: நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி

kaleelrahman

முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பில் வலம் வந்த தபால் வாக்குச் சீட்டு வீடியோவால் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை. இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தபால் வாக்குகளை தவறான முறையில் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிபவர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவர், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடியில் தலைமை அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த 26.03.2021 அன்று சங்கரன் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் அந்த இடத்தில் தபால் ஒட்டை பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக வருவாய்த் துறை அதிகாரியிடம் இருந்து தபால் ஓட்டை பெற்றுக் கொண்ட நபர்கள், ஒரு குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த ஆசிரியை இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் தான் தபால் ஒட்டை பெற்றுக் கொள்ளவில்லை. முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும், சமூக வலைதளங்களில் அதனை பதிவிட்ட நபர்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் விடுக்கப்பட்டுள்ள துறைவாரி நடவடிக்கை பரிந்துரையை கைவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.