தென்காசியில் வனத்தில் தேன் எடுத்து பிழைக்கும் பழங்குடி குடும்பத்தினரை வனத்திற்குள் அனுமதிக்காமல், வனத்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருக்கு உட்பட்ட கருப்பாநதி, கோட்டமலை, தலையணை ஆகிய மலைப்பகுதிகளில் பளியர் எனும் பழங்குடி மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இவர்கள் 1980ஆம் ஆண்டிற்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குகைகள், பாறை இடுக்குகள், மரத்தின் மேல் அமைந்த பரண், ஓலைக் குடிசைகளில் நாடோடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். நாகரிக வளர்ச்சியை நாடு அடைந்தபோதிலும், அதிலிருந்து விலகிய இம்மக்கள் காடுகளில் தனிமைப்பட்டு, உணவு தேடும் நிலையிலே இருந்திருக்கிறார்கள்.
1980க்கு பிறகு காடுகள் பாதுகாப்புச் சட்டம், மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் அமலாகின. இதையடுத்து மலைப்பகுதியிலிருந்த பழங்குடி மக்களை மீட்டு, ஊர்ப்பகுதிகளுக்கு அருகாமையில் இருந்த மலையோர பகுதிகளில் அரசு வீடுகள் கட்டி குடியமர்த்தியது. இவர்கள் மலைத்தேன், வன மகசூல் சேகரிப்பது தவிர எந்தத் தொழிலிலும் பழக்கப்படாமல் வாழ்ந்தவர்கள். இன்றும் அதேதொழில்களை செய்து வருகின்றனர். இதனால் இவர்கள் இன்று வரையிலும் வன வாழ்க்கையிலிருந்து முழுமையாக மீண்டு வரவில்லை. இன்று இவர்கள் வாழ்வாதாரத்திற்காக வனத்திற்குள் தான் செல்ல வேண்டும். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் காட்டில் தங்கியிருந்து தேன் மற்றும் வன மகசூல் பொருட்களை சேகரித்து வந்து ஊர்ப்புறங்களில் விற்று வாழ்கின்றனர்.
இதில் கிடைக்கும் சொற்பத் தொகைதான் அவர்களது வருமானம். இவர்களுள் ஒருசிலர் மட்டுமே ஆடு வளர்ப்பதை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடி அருகே உள்ள கோட்டமலை செழிம்புத்தோப்பு பகுதியில் வசிக்கும் பளியர் மக்களை வனப்பகுதிக்குள் சென்று வனப் பொருட்கள் சேகரிக்கவும், தேன் எடுக்கவும் வனத்துறையினர் அனுமதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள மக்கள் பழங்குடியினர் வன உரிமைச் சட்டம் 2006-ன் படி, சிறு வனப் பொருட்களை வனத்தினுள் சென்று சேகரிக்கவும், வியாபாரம் செய்யவும், மதிப்புக் கூட்டுப் பண்டமாக மாற்றவும் பூரண உரிமை உள்ளது.
ஆனால், திடீரென தங்களுடைய வன உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக பளியர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மற்ற பகுதிகளில் வசிக்கும் பளியர் மக்கள் எவ்வித தடையுமின்றியும் வனத்தினுள் சென்று தேன், வன மகசூல் பொருட்கள் சேகரித்து வருகின்றனர். குறிப்பாக செழிம்புதோப்பு பகுதியில் மட்டுமே புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தங்களை வனத்துக்குள் செல்ல அனுமதிக்க மறுப்பதாகவும், மீறிச் சென்றால் தங்களை மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வனச்சரகரின் தொல்லைக்கு பயந்து பல குடும்பங்கள் செழிம்புத்தோப்பு பகுதியிலிருந்து வெளியேறி அருகாமையில் உள்ள பளியர் குடியிருப்புகளுக்கு சென்று குடியேறிவிட்டதாகவும், தற்போது அங்கே 15 குடும்பங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர். தெரிந்த தொழிலையும் செய்யவிடாமல் தடுத்தால் இந்த கொரோனா காலத்தில் எங்கு சென்று வேலை தேடுவது, என்ன வேலை செய்வது எனத் தெரியாமல் அவர்கள் புலம்புகின்றனர். வன உரிமைச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி, தங்களை வனத்தினுள் சென்று வன மகசூல் பொருட்களை எடுக்கவும், தேன் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.