தமிழர்கள் எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும், இனிப்பில்லாமல் கொண்டாடுவது கிடையாது. நம் முன்னோர்கள் எல்லாம் தாங்கள் செய்யும் உணவுகளில் குறிப்பாக இனிப்புகளில் ஆரோக்கியம் உள்ளதையே பார்த்து பார்த்து சமைத்தனர். அந்த வகையில் ஆரோக்கியமுள்ள உணவுகளையே அதிகமாக சாப்பிட்டு வளர்ந்தவர்களும், நம் முன்னோர்கள். உணவே மருந்தென போற்றி பாதுகாத்து வளர்ந்ததுதான் நம் தமிழ் பாரம்பரியம்.
இளநீர் பாயாசம் இந்தக் கோடைக்காலத்திற்கு ரொம்ப நல்லது. உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது. இளநீர் பாயாசம் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
அடர்த்தியான (திக்கான) பசும் பால் - ஒன்றரை கப்
அடர்த்தியான (திக்கான) தேங்காய் பால் - 1 கப்
இளநீர் வழுக்கை - அரை கப்
சர்க்கரை (அல்லது) நாட்டுச் சர்க்கரை - ஒன்றரை கப்
ஏலக்காய் (பொடித்தது) - 3
அரைக்க வேண்டியவை:
இளநீர் வழுக்கை - அரை கப்
இளநீர் (அ) தேங்காய் தண்ணீர் - முக்கால் கப்
செய்முறை:
1. முதலில் மிக்ஸியில் அரை கப் இளநீர் வழுக்கையையும், இளநீரையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
2. பாலை நன்கு காய்ச்சி, கொதித்தவுடன் சர்க்கரை (அ) நாட்டுச் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.
3. பின், அடுப்பின் தீயை குறைத்து விட்டு சிம்மில் வைத்துக் கொள்ளவும். பால் நன்கு சுண்டி வரும் வரை காத்திருக்கவும்.
4. பால் சுண்டி வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
5. பால் நன்கு ஆறிய பின்பு அதில் அரைத்து வைத்த இளநீர் விழுதையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து கலக்கி சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பிறகு சில்லுனு பரிமாறலாம்.
குறிப்பு:
1. இளநீர் நல்ல இளசா இருக்கும்படி பார்த்து வாங்கி கொள்ளவும்.
2. நெய்யில் வருத்த முந்திரி, பாதாம் போன்ற உலர் பழங்களை விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
3. ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்றால், நாட்டுச் சர்க்கரைக்கு பதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.
4. பரிமாறுவதற்கு முன்பு மேற்புறம் இளநீர் வழுக்கை அரைக்காமல் சிறிது சேர்த்து பரிமாறவும்.
நன்றி: தர்ஷினி ராம்.