டிரெண்டிங்

பாடத்தில் சந்தேகமா..? மாணவர்களின் வீட்டிற்கே சென்று சொல்லித் தரும் ஆசிரியர்கள்...!

kaleelrahman

மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் படிக்க வேண்டும் என்ற நடைமுறை மாறி, ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டுக்கே சென்று பாடம் நடத்தும் சூழ்நிலையை கொரோனா ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் கல்வி தடை படக்கூடாது என்பதற்காக கடந்த 100 நாள்களுக்கும் மேலாக வாட்ஸ்-அப் மூலம் பாடங்களை அனுப்புவது மட்டுமல்லாது, மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடங்களில் உள்ள சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார்கள் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்.


கரூர் அருகே உள்ள புலியூரில் ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. 12ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி போதிக்க சுமார் 30 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இச்சூழ்நிலையில், ராணி மெய்யம்மை பள்ளியில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வாட்ஸ்-அப் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது.


அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு தினசரி இரண்டு பாடங்கள் வீதம் செல்போனில் வீடியோவாக பதிவுசெய்து மாணவர்களுக்கு அனுப்புகிறார்கள். மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் பாடங்களை அனுப்புவதுதோடு நாள்தோறும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் வீட்டிற்கே சென்று பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கின்றனர். பள்ளி திறக்கும் வரை இப்பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினர்.