டிரெண்டிங்

“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை

“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை

webteam

ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என பிரதமர் மோடி கூறவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த இந்தியா என்ற‌ பெயரில் எதிர்க்கட்சிகள் பங்குகொள்ளும் பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அதற்குத் தலைமை தாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதில் சுமார் 20-க்கும் ‌அதிகமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, நாட்டிலிருந்து மதவாதத்தை விரட்ட 2-வது சுதந்தரப் போராட்டம் தொடங்கியுள்ளதாக கூறினார்.

மேலும், “100 மேடைகளில் 1,000 பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றும் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.” என்றார்.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என பிரதமர் மோடி கூறவில்லை என தெரிவித்தார்.

மேலும், “வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிற கருப்பு பணம் மட்டுமில்லாமல் உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிற கருப்பு பணத்தை மீட்டால் அது ஒரு குடும்பத்திற்கு 15 லட்சம் திட்டமாக வரும். அதில் 5 லட்சம் திட்டம் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டமாக வந்துள்ளது. இன்னும் 10 லட்சம் இல்லாமல் 50 லட்சத்திற்கு கூட திட்டம் கொடுப்பார் பிரதமர். மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு தான் அதிக திட்டங்கள் கிடைத்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பாஜக காலை மட்டுமல்ல, வேரையும் ஊன்றும்.” என தமிழிசை தெரிவித்தார்.