கேரளாவில் நடைபெற்ற தென் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகமும், தெலுங்கானாவும் பங்கேற்கவில்லை.
பாரதிய ஜனதா அல்லாத பிற கட்சிகள் ஆளும் தென் மாநிலங்களின் கூட்டம் கேரளாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
மத்திய அரசின் 15 ஆவது நிதிக்குழுவின் ஆய்வு வரம்பில் உள்ள அம்சங்கள், முன்னேறும் மாநிலங்களுக்கு எதிரானது என்று கூட்டத்தில் பங்கேற்ற நிதியமைச்சர்கள் குற்றம்சாட்டினர். இதுபற்றி விவாதிக்க இம்மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் விசாகப்பட்டினத்தில் மீண்டும் கூடி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம், ஒடிஷா, பஞ்சாப், டெல்லி மாநிலங்களும் பங்கேற்கும் என்று எதிர்பார்ப்பதாக கேரளா நிதி அமைச்சர் டிஎம் தாமஸ் தெரிவித்தார்.
கேரளாவில் இப்படியொரு கூட்டம் நடைபெறும் போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் நேற்று 15 ஆவது நிதிக்குழுவின் ஆய்வு வரம்புகள் குறித்து தமிழகத்தின் கருத்துகளை வடிவமைப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர், நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது 15 ஆவது நிதிக்குழுவிடம் தமிழகத்திற்கு பாதகமான அம்சங்களை திருத்த மத்திய அரசிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. 1971 க்கு பதிலாக 2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்க முடிவு செய்திருப்பதால் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு பெரிதும் குறையும் என்றும் மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என நிதி ஆணையத்திடம் வலியுறுத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.
இதில் என்னவென்றால் கேரளாவில் தென் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஆனால், அதனை புறக்கணித்து விட்டு தமிழகம் தனியாக கூட்டம் நடத்துகிறது. ஒருவேளை கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டால் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானதாக பார்க்கப்படும். மத்திய அரசுடன் இணைக்கமாக இருக்கவே நினைப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சொல்லி வருகிறது. அதனால், தென் மாநிலங்களிடையே நடைபெறும் கூட்டத்தை தமிழகம் புறக்கணித்துள்ளது.
அதேபோல், தெலுங்கானாவும் கூட்டத்தை புறக்கணித்துள்ளது. முதன் முதலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தவர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ். அவர் மம்தா உடன் இணைந்து மத்திய அளவில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதனால், தென் மாநில அளவிலான நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதை விரும்பி இருக்கமாட்டார்.