டிரெண்டிங்

வாக்குக்கு பணம் கொடுத்தேனா? - வைரலான வீடியோ குறித்து முதல்வர் விளக்கம்

வாக்குக்கு பணம் கொடுத்தேனா? - வைரலான வீடியோ குறித்து முதல்வர் விளக்கம்

rajakannan

சேலத்தில் தான் வாக்குக்கு பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 6 வரை முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் தன்னுடைய பரப்புரையை நிறைவு செய்தார். 

அதேபோல், முதல்வர் பழனிசாமி சேலத்தில் தன்னுடைய இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்டார். சேலம் பட்டைக்கோயில், சின்னக்கடை வீதி, பெரியக்கடை வீதி, தேர் வீதி, பஜார்தெரு, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெரு, முதல் அக்ரஹாரம், இரண்டாம் அக்ரஹாரம் எனப் பல பகுதிகளில் வீடு வீடாகவும், கடை, கடையாக நடந்து சென்று நேரடியாக மக்களைச் சந்தித்து தங்களது வேட்பாளர் சரவணனுக்கு வாக்கு சேகரித்தார்.    

இந்நிலையில், சேலத்தில் பரப்புரையின் போது முதல்வர் பழனிசாமி வாக்குக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோ குறித்து புதிய தலைமுறைக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில், “சேலத்தில் வாக்கு சேகரிக்கும் போது பழக்கடைக்காரர் எனக்கு பழம் தந்தார். அதற்குதான் நான் பணம் கொடுத்தேன். திமுகவினரை போன்று எந்த பொருளையும் நாங்கள் இலவசமாக வாங்குவதில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.