டிரெண்டிங்

தமிழக பாஜக தலைவர்களும் ட்விட்டரில் "சவுக்கிதார்" ஆனார்கள் !

பாஜகவின் தேசியத் தலைவர்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் "சவுக்கிதார்" (மக்கள் பாதுகாவலன்) என தங்களது ட்விட்டர் கணக்கில் பெயர் மாற்றினர். இது இந்தியளவில் ஹாஷ்டாக்கில் ட்ரெண்ட் ஆனது இதனையடுத்து தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்களும் இப்போது தங்களது பெயருக்கு முன்னால் "சவுக்கிதார்" என இணைத்துள்ளனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தன்னுடைய ட்விட்டர் கணக்கின் பெயருக்கு முன்பு சவுக்கிதாரை இணைத்துள்ளார். மேலும், அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

அதில் "தற்சமயம் முதல் என்னுடைய ட்விட்டர் கணக்கு  மக்கள் பாதுகாவலர் டாக்டர்  தமிழிசை சௌந்தரராஜன்  ( Chowkidar Dr Tamilisai Soundararajan )என்று  இயங்கும்" என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோரும் தங்களது ட்விட்டர் கணக்கின் பெயருக்கு முன்பு சவுக்கிதாரை இணைத்துள்ளனர். இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் மட்டும் இன்னும் தனது பெயருக்கு முன்பு மக்கள் காவலன் பட்டத்தை சேர்க்கவில்லை.

ஊழலுக்கு எதிராக போராடும் அனைவரும் நாட்டின் பாதுகாவலர்களே என பேசியிருந்தார், பிரதமர் நரேந்திர மோடி. இதனையடுத்து பிரதமர் தனது அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் பெயரை ’சவுக்கிதார்  நரேந்திர மோடி’ என மாற்றியுள்ளார். ’சவுக்கிதார்’ என்றால் பாதுகாவலன் என்று பொருள் கொள்ளலாம்.

பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ட்விட்டரில் தங்களது பெயருக்கு முன்பு ’சவுக்கிதார்’ என்று இணைத்துக்கொண்டனர். அதே போல ட்விட்டரில் #chowkidar என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது.

நாடாளுமன்றம் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள சூழ்நிலையில் "சவுக்கிதார்" மூலம் தனது தேர்தல் பரப்புரை யை சமூக வலைத்தளங்களில் பாஜக தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.