தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தாக்கல் செய்யப்பட்ட மூவாயிரத்து 663 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாயிரத்து 171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று முன்தினம் வரை ஏழாயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவை அனைத்தும் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன. இதுதொடர்பான தரவுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதிகாலை 5 மணி நிலவரப்படி, மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட ஏழாயிரத்து 255 மனுக்களில் இரண்டாயிரத்து 171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவாயிரத்து 663 மனுக்கள் ஏற்கபட்டுள்ளன.
சென்னை வில்லிவாக்கம், துறைமுகம், எடப்பாடி, அறவக்குறிச்சி, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், ஆலங்கும், நான்குனேரி உள்ளிட்ட சுமார் 30 தொகுதிகளுக்கான இறுதி பட்டியல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 13 ஏற்கப்பட்டுள்ளன. இங்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.