டிரெண்டிங்

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு செய்யாதது ஏன்?: தமிழிசை விளக்கம்

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு செய்யாதது ஏன்?: தமிழிசை விளக்கம்

Rasus

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வு செய்வதில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதில் இருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர் என பல மாவட்டங்களில் இதுவரை அவர் ஆய்வு செய்துள்ளார். ஆனால் ஆளுநரின் ஆய்வுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று தஞ்சையில் ஆய்வுக்கு சென்ற ஆளுநருக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி காட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஆளுநர் தனது ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று ஆளுநரின் ஆய்வு குறித்து பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஆய்வு செய்வதால் ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லக்கூடாது என கூறினார். மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வு செய்வதில்லை எனவும் குறிப்பிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விதிமுறைப்படி இல்லாமல் நிதிமுறைப்படி நடந்துள்ளதாக தெரிவித்த அவர், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை எனவும் சாடினார்.