டிரெண்டிங்

“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை

“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை

webteam

எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது எனத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  “தமிழகத்தில் வரும் கருத்துகணிப்புகள் நிச்சயமாக வெற்றி கருத்துக் கணிப்புகளாகத்தான் இருக்கும் என்பது என்னுடைய கருத்து. நான் இவ்வாறு சொன்னதும் இதற்குப் பின் பாஜக தான் இருக்கிறது என அழகிரி சொல்லுவார். 

கருத்துக் கணிப்பை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுகதான். கல்லூரியில் கருத்துக் கணிப்பு நடத்துவார்கள். அதையே மக்கள் மனதில் திணிப்பார்கள். அதையே தேர்தல் முடிவுகளில் எதிர்பார்ப்பார்கள். அதை மீறி கருத்துக் கணிப்புகளுக்கு பின்னால் பாஜக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார் அழகிரி. அவர்கள் ஊடகங்களை உதாசினப்படுத்துகிறார்கள். காங்கிரஸ், திமுக, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு இது கண்டிப்பாக எக்ஸிட் போல்தான். மோடியின் நல்ல திட்டங்கள் தொடர வேண்டும். 

எந்தச் சுயநலமும் இல்லாத தலைவர் மோடி. கருத்துக் கணிப்புகள் சில நேரங்களில் தவறாகலாம். அதாவது எங்களுடைய இடங்கள் கூடுமே தவிர குறையாது. நாளை பாஜக கூட்டணிக்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. ஆக்கப்பூர்வமான அரசியலை அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் மாறுபட்ட சூழ்நிலை நிலவுகிறது. மற்ற எந்த மாநிலத்திலும் இவ்வாறு இல்லை. அதனால்தான் தமிழகத்தில் கருத்துக் கணிப்பு மாறலாம் எனக் கூறினேன்.

நாடு வளர்ச்சி அடைய வேண்டும். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றால் எந்தத் திட்டமும் முன்னெடுத்து செல்லக்கூடாது என்பதை தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது. ஸ்டாலின் தப்புக் கணக்கு போடுகிறார். இடைத்தேர்தலில் திமுக அலை வீசவில்லை. ஆட்சி நிச்சயமாக வலுப்பெறும்.” எனத் தெரிவித்தார்.