டிரெண்டிங்

சிங்கப்பூரை விட இந்தியாவில் சிறந்த மருத்துவம்: மெர்சலுக்கு தமிழிசை பதிலடி

சிங்கப்பூரை விட இந்தியாவில் சிறந்த மருத்துவம்: மெர்சலுக்கு தமிழிசை பதிலடி

webteam

சிங்கப்பூரில் இலவச மருத்துவம் கிடைப்பதில்லை என்றும், அதைவிட சிறந்த மருத்துவம் இந்தியாவில் கிடைக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “கமல்ஹாசன் விளம்பரத்திற்காக தான் நிலவேம்பு குறித்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஏனென்றால் கடந்த 50 வருடங்களில் தமிழகத்தில் நிறைய பிரச்னைகள் வந்துள்ளது. அப்போதெல்லாம் கருத்து தெரிவிக்காத கமல், தற்போது சினிமாத்துறையில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக மன்னிப்பு கோரியிருக்கிறார். அப்படியென்றால் அவர் அதற்கு மட்டுமல்ல, பல விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “மத்திய அரசின் திட்டங்களை, உரிய ஆதாரங்கள் இன்றி சினிமாவில் விமர்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அதற்கு நாங்கள் எதிர்க்கருத்து கூறத்தான் செய்வோம். ஏனென்றால் மக்களுக்கு உண்மையை புரியவைக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். சினிமாவில் நடிகர் பேசும்போது திரையில் வருவதால் கை தட்டுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளாகிய நாங்கள் பேசுவது சினிமாத்திரையில் வருவதில்லை, எனவே மக்கள் கை தட்டுகிறார்களா? இல்லையா? என்பது தெரியாது. அதேபோன்று கைதட்டுகள் வருவதெல்லாம் நல்ல கருத்துகள் என்று கூற முடியாது. ஜிஎஸ்டி வரியால் கல்வி, மருத்துவம் போன்றவை வியாபாரம் ஆக்கப்படுவது தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்பது நடிகர்கள் அக்கறை அல்ல, அது எங்கள் அக்கறை. நாடு முழுவதும் மருந்துகளின் விலையை மோடி குறைத்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து எனக்கு தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் தகவல் வருகிறது. அங்கு இலவச மருத்துவம் அளிக்கப்படவில்லை. சிங்கப்பூரை விட சிறந்த மருத்துவ சிகிச்சை இந்தியாவில் வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.