தமிழ்நாட்டில், மக்களவைத் தேர்தலில் கடந்த 2014ம் ஆண்டு பதிவான வாக்கு சதவிகிதத்தை விட இம்முறை வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்திருந்தாலும் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த முறையை விட இம்முறை அதிகம் பேர் வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 தொகுதிகளில் 73.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இம்முறை 72.04 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. 2014ம் ஆண்டில் 5 கோடியே 37 லட்சத்து 37 ஆயிரத்து 189 பேராக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, இம்முறை 5 கோடியே 83 லட்சத்து 97 ஆயிரத்து 75 ஆக அதிகரித்திருந்தது.
2014 தேர்தலில், பதிவு செய்த வாக்காளர்களில் 3 கோடியே 95 லட்சத்து 80 ஆயிரத்து 472 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். இதுவே இம்முறை 4 கோடியே 20 லட்சத்து 71 ஆயிரத்து 371 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். அதாவது கடந்த முறை வாக்களித்தவர்களை விட இம்முறை சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.
எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது தென் சென்னை தொகுதியில் மட்டுமே வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு இருந்ததைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4 ஆயிரத்து 500 மட்டுமே அதிகரித்துள்ளது. இங்கு கடந்த 2014ம் ஆண்டு 8 லட்சத்து 14 ஆயிரத்து 679 வாக்குகள் பதிவாகியிருந்தன. இம்முறை 7 லட்சத்து 81 ஆயிரத்து 860 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.