பிரதமர் மோடி தலைமையில் வாரணாசியில் நடைபெற்ற பேரணியில் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் முதல் மூன்று கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும், நான்கு கட்ட வாக்குப் பதிவு மீதமுள்ளது. அதற்கான பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன. பிரதமர் மோடி தலைமையில் வாரணாசியில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. பின்னர், சாலைவழியாக திறந்த வாகனத்தில் மோடி பேரணியாக சென்றார். இருபுறங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடி நின்றனர்.
இந்நிலையில், வாரணாசியில் மோடியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கங்கைக்கு பூஜை செய்யும் போது ஓ.பன்னீர்செல்வம் உடனிருந்தார். நாளை மோடி வேட்புமனுத் தாக்கல் செய்யுள்ள நிலையில், ஓபிஎஸ் அதில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
இதனையடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்தார். தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் வேட்பாளராக களம் கண்டுள்ள நிலையில் அவரும் தன்னுடைய தந்தையும் மோடியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.