தமிழகத்தின் பிரதான கட்சியான திமுக தேர்தல் நிபுணரின் திட்டப்படி வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில் தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும் தேர்தல் நிபுணர் சுனிலுடன் கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வந்தாலும் மறுபுறம் வரப்போகும் 2021ம் ஆண்டு தேர்தலுக்கும் அனைத்துக் கட்சிகளும் சத்தமில்லாமல் தயாராகி வருகின்றன. கொரோனாவுக்கு முன்னதாகவே பிரசாந்த் கிஷோரிடம் கைகோர்த்தது திமுக. தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியபோது வந்தது கொரோனா. தற்போது கொரோனா விவகாரத்தில் திமுக எடுக்கும் நடவடிக்கைகள், ஒன்றிணைவோம் வா பிரசாரம், அடிக்கடி அறிக்கைகள், இணையதள ஹேஸ்டேக் ட்ரெண்டுகள் இவை அனைத்தும் பிரசாந்த் கிஷோரின் திட்டப்படி நடப்பதாகவே கூறப்படுகிறது.
இப்படி தமிழகத்தின் பிரதான கட்சியான திமுக தேர்தல் நிபுணரின் திட்டப்படி வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில் தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும் தேர்தல் நிபுணர் சுனிலுடன் கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா விவகாரத்தில் அதிமுக எடுக்கும் நடவடிக்கைகளும் சுனிலின் திட்டப்படியே அரங்கேறுவதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு திட்டம் வகுத்த கொடுத்த பிரசாந்த் கிஷோருடன் அணியில் இருந்தவர் சுனில். தமிழகத்தில் சுனில் ஏற்கெனவே திமுகவுடன் இணைந்து செயலாற்றி உள்ளார். ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் சுனில்.
2018 மக்களவைத் தேர்தலின் போதும் சுனில் திமுகவிற்காக பணியாற்றினார். அப்போது தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலையை திமுக உருவாக்கியதில் சுனில் முக்கிய பங்காற்றியவர் எனக் கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக அமோகமான வெற்றி பெற்றது. ஆனால் நவம்பர் 2019ல் திமுகவிடம் இருந்து சுனில் விலகினார். அடுத்த மாதமான டிசம்பரிலேயே திமுகவுக்குள் வந்தார் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில் தற்போது சுனிலுடன் அதிமுக கைகோர்த்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து அதிமுகவிடம் இருந்து வெளியான சில தகவலின்படி, கிராம பஞ்சாயத்திலிருந்து வியூகம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய ஐடி விங்க் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் பல மாற்றங்கள் விரைவில் வரும். கட்சி மெல்ல மெல்ல தேர்தல் களத்துக்குள் புகுந்து கொண்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது