டிரெண்டிங்

கொல்கத்தாவை 'சுட்டெரித்த' சன் ரைஸர்ஸ் - ஐதராபாத் அணிக்கு 3வது தொடர் வெற்றி

Veeramani

ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம் ஆகியோரின் பட்டாசு ஆட்டத்தால் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி தொடர்ச்சியான 3ஆவது வெற்றியை ஈட்டியுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பத்தில் மந்தமாக ஆடினாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு ஆடி 20 ஓவரில் 175 ரன் எடுத்தது. தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் அய்யர், ஆரோன் ஃபிஞ்ச் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். கேப்டன் ஸ்ரேயஸ் 28 ரன் எடுத்து வெளியேறினார். நிதிஷ் ராணா அதிர்வேட்டு ஆட்டம் ஆடி 36 பந்தில் 54 ரன் குவித்தார். இறுதிக்கட்டத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 25 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சர்களை சிதறடித்து 49 ரன் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் துல்லியமாக பந்துவீசி 3 விக்கெட் சாய்த்தார்.



176 ரன் என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணிக்கு ராகுல் திரிபாதி ராக்கெட் வேக தொடக்கம் தந்தார். இவர் 6 சிக்சர், 4 பவுண்டரி விளாசி 71 ரன் எடுத்தார். மறுமுனையில் அய்டன் மார்க்ரம் அமர்க்களமாக ரன் குவித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். 17.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஐதராபாத் வெற்றிபெற்றது. மார்க்ரம் 36 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்தார். இவ்வெற்றி மூலம் இத்தொடரில் தொடர்ச்சியாக 3ஆவது வெற்றியை பதிவு செய்த ஐதராபாத் புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியது.