டிரெண்டிங்

“அட ப்ரீயா விடுங்க பாஸ்...”- எதற்குமே தற்கொலை தீர்வல்ல!

“அட ப்ரீயா விடுங்க பாஸ்...”- எதற்குமே தற்கொலை தீர்வல்ல!

Sinekadhara

ஊடரங்கு அனைவரையும் நான்கு சுவற்றுக்குள் முடக்கிப் போட்டுவிட்டது. நோயைக் கட்டுப்படுத்துவது என்பது ஒருபுறமிருக்க ஒரு தனிமனிதன் இதனால் மனதளவில் பாதிக்கப்படுகிறான். இடையூறுகளை எதிர்கொள்ளும் திறன் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. அதிலும் மன வேதனையை தருவது, மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்வது வருத்தமளிக்கும் ஒன்று.

தற்கொலை செய்ய தூண்டும் காரணிகள்  

கல்வி பயிலும் மாணவ-மாணவிகளும் தற்கொலை செய்ய ஆரம்பித்ததுதான் சமீப காலத்தில் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளது. ஆன்லைன் வகுப்புகள், படிப்பதற்கான வசதி இல்லை போன்ற பல காரணங்களை வைத்துக்கொண்டு உடனே எடுக்கும் முடிவு தற்கொலை. வெற்றியை கொண்டாடும் மனமகிழ்ச்சி இருக்கும் நமக்கு தோல்வியை தாங்கும் மனவலிமை இல்லாமல் போவது வேடிக்கையே. கேட்டது கிடைக்கவில்லை என்ற அற்ப தோல்விக்காக தன் உயிரை மாய்த்து கொள்ளும் மனநிலை கொடியது.

ஒரு பக்கம் இளம் வயதினர் என்றால் மறுபக்கம் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்களும் தற்கொலை செய்துகொள்வது சமூகத்திற்கு தவறான உதாரணமாகவே உள்ளது. மேலும் இந்த ஊடங்கினால் ஏற்பட்ட வறுமை பெரும்பாலானவர்களை தற்கொலை முடிவுக்குத் தள்ளியுள்ளது. இதற்கு சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்பாவான்.

நாம் பெரிதும் கவனிக்க வேண்டியது, நம்மால் முடியாது என்ற தகாத வசனமே. அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது.  மற்றொரு முக்கிய காரணி என்னவென்றால் பிறர் நம் மீது வைக்கும் விமர்சனங்களை ஏற்று கொள்ளும் அளவிற்கு பக்குவமில்லாத மனப்பான்மைதான்.

தனிமையே தற்கொலையின் ஆயுதம்

இன்றையே பிஸி வாழ்வில் மன அழுத்தம் என்பது நீரிழிவு நோய் போன்று பெரும்பாலானோருக்கு உள்ளது. மன அழுத்தம் வர காரணிகளாக உளவியல் நிபுணர்கள் சில தகவலை கூறுகிறார்கள். முன்பெல்லாம் தன் சுக துக்கங்கள் அனைத்தையும் குடும்பத்தினரோடு பகிர்ந்து கொண்டனர். இரவு ஒன்றாக அமர்ந்து உணவு எடுத்து கொள்வது, பேசி மகிழ்வது போன்று  தன்னுள் இருந்த பிரச்னைகளை பிறரிடம் பகிர்ந்து, அவர்கள் மூலம் பெரும் ஆறுதல் ஒரு நல்ல மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சோஷியல் மீடியாக்களோடுதான் வாழ்ந்து வருகிறோம். மனம்விட்டு பேசுவதற்கு நேரமில்லை. அதற்கான ஆட்களும் இல்லை. மனக்கசப்புகளை தனிமையில் எண்ணி பார்க்கையில் தற்கொலையே சிறந்த முடிவாக தென்படுகிறது என சிலர் நினைக்கின்றனர். மலையளவு பிரச்னைகளையும் எளிதாக கடந்து சென்ற சமூகத்தில் இன்று கடுகளவு பிரச்னையையும் எதிர்கொள்ள திணறுவது இந்த கால மனிதர்கள் உளவியல் ரீதியாக சோர்வு அடைந்து விட்டார்கள் என்பதையே காட்டுகிறது.

கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது.  அதில் குறிப்பாக 15 முதல் 45 வயதுடையவர்கள் 90 சதவீதம் என்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. மேலும் 2016ஆம் ஆண்டின் ஆய்வின் படி இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாம். இன்று யாரை கேட்டாலும் “ஒரே ஸ்ட்ரெஸ் தான்” என்கிறார்கள். உடல் ஆரோக்யத்திற்கு கவனம் செலுத்த ஜிம் செல்லும் நாம், உளவியல் ஆரோக்யத்தை ஏனோ கண்டு கொள்வதில்லை.

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து, பிரச்னைக்கான சரியான வழிமுறையை அறிந்து தீர்வுகாண வேண்டும். மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும்.