Sudha murthy  Facebook
டிரெண்டிங்

‘என்ன ஜோக் காட்றீங்களா?’- இங்கிலாந்து பிரதமரின் மாமியாரை நம்பமறுத்த அதிகாரிகள்; சுதா மூர்த்தி ஷேரிங்

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கின் மாமியாரை, லண்டன் விமானநிலையத்தில் அதிகாரிகள் நம்பாமல் கேள்வி எழுப்பியதாக அவர் பகிர்ந்துள்ளார்.

Seyon Ganesh

இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. எழுத்தாளரான இவர் பிசினஸ் மற்றும் எழுத்து வட்டாரங்களில் மிகவும் பிரபலமானவர். ஆனால் சமீப காலமாக இவர் பெயர் பல செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இதற்குக் காரணம் இவரது மருமகன் இங்கிலாந்து பிரதமராக இருப்பதுதான். நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். மகள், அக்‌ஷதா மூர்த்தி மற்றும் மகன் ரோஹன் மூர்த்தி. இதில் மகள் அக்‌ஷதா தற்போது இங்கிலாந்து பிரதமராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதன் காரணமாகவே சுதா மூர்த்தியும் தற்போது ஃபேமஸாகி வருகிறார். இப்படியான நிலையில் இவர் ஹிந்தி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான ‘தி கபில் ஷர்மா’ ஷோவில் கலந்துகொண்டு தன்வாழ்க்கை, மகள் அக்‌ஷதா மற்றும் மருமகன் ரிஷி, இன்போஸிஸ் ஆகியவற்றைப் பற்றி மனம் திறந்துபேசியுள்ளார். மேலும் தன் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சுதா மூர்த்தி, “ஒருமுறை நான் லண்டன் சென்றிருந்தபோது குடியுரிமை அதிகாரி ஒருவர் இங்கிலாந்தில் நான் எங்கு வசிக்கப் போகிறேன் என்பதை ஒரு படிவத்தில் எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது என்னுடன் என் மூத்த சகோதரியும் இருந்தார். நான் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடான ‘10 டவுனிங் ஸ்ட்றீட்’ என்று எழுத வேண்டாம் என தான் நினைத்தேன். ஆனால் என்னுடைய மகனும் லண்டனில் தான் வசிக்கிறார். அவரது முகவரி எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அதனால் பிரதமரும் என் மருமகனுமான ரிஷியின் அதிகாரப்பூர்வ வீட்டு முகவரியை எழுதினேன்.

Sudha murthy in Kapil sharma show

அதை பார்த்த குடியுரிமை அதிகாரி, ‘ நீங்கள் ஜோக் செய்கிறீர்களா?’ என என்னைக் கேட்டு முழுவதும் நம்பாமல் இருந்தார். பின்னர் நான் அனைத்து விஷயங்களையும் விளக்கிக் கூறினேன். தான் அக்‌ஷதா மூர்த்தியின் தாய், பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் மற்றும் இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி என அனைத்தையும் கூறினேன். பிறகுதான் என்னை நம்பினார்கள். 72 வயது எளிமையான பெண்ணாக இருக்கும் நான் பிரதமரின் மாமியாராக இருக்க முடியும் என யாரும் நம்பவில்லை” என நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார்.

பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான சுதா மூர்த்தி கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்ற இவர், இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் நிறுவனத்தில் (டெல்கோ) பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர்.

சுதா மூர்த்தி

சுதா மூர்த்தி ஒரு பொது அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து வருகிறார். ஆடம்பரத்தை விரும்பாத இவர் எப்போதும் மிகவும் எளிமையான புடவை, எவ்வளவு பெரிய நிகழ்ச்சியானாலும் கழுத்தில் ஒரு செயின் என்றே காட்சி தருவார். சுதா மூர்த்தியின் சமூக சேவைகளை பாராட்டி சமீபத்தில் இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.