டிரெண்டிங்

திடீர் திருப்பம்: இரட்டை இலை வழக்கில் தினகரன் விடுவிப்பு?

webteam


இரட்டை இலை சின்னத்தைப்பெற  லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரன் பெயர் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான எந்தவித ஆதாரங்களும் சேகரிக்க முடியவில்லை என்றும், ஒரு செல்போன் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கம் செய்தது. இதையடுத்து அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு
ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். டிடிவி தினகரனுடன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட டிடிவி தினகரன் சில வாரங்களுக்கு பின்பு ஜாமினில் விடுதலையானார். 
லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் டிடிவி.தினகரனும், சுகேஷும் பலமுறை செல்போனில் பேசியுள்ளதாக கூறியதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.இதனையடுத்து அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள், செல்போன் உரையாடல் ஆகியவைக் கொண்டு டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விரைவில் வழக்குத் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதனால் வழக்கிலிருந்து டிடிவி தினகரன் விரைவில் விடுவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. குற்றபத்திரிகையில் டிடிவி தினகரனின் பெயர் இல்லை என்பதால் அவர் விரைவில் விடுக்கப்படலாம் எனக் கூறப்டுகிறது. இதனால் அதிமுகவில் தினகரன் ஆதிக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.