டிரெண்டிங்

அமைச்சர்கள் திடீர் ஆலோசனை - தினகரனுக்கு சாதகமா? பாதகமா?

அமைச்சர்கள் திடீர் ஆலோசனை - தினகரனுக்கு சாதகமா? பாதகமா?

Rasus

டிடிவி தினகரன் திஹார் சிறையிலிருந்து ஜாமினில் வெளியான நிலையில் தான் அதிமுகவில் தான் இருக்கிறேன் என்றும், தன்னை நீக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே இருப்பதாகக் கூறினார். 
அதிமுகவில் அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி என இரு அணிகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தினகரனின் ஆதரவாளர்கள் அணி என்று தனியாக ஒன்று உருவாகி வருகிறது. இந்நிலையில், இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வி.கே.சசிகலாவை சந்திக்க சென்ற டிடிவி தினகரன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் “அமைச்சர்கள் ஏதோ பயத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் என்னை விலகி இருக்கச் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு என்னால் எந்த பாதிப்பும் வராது" என்று கூறினார். 
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல்வர் அல்லாது 29 அமைச்சர்கள் இருக்கும் நிலையில், அவர்களில் 17 பேர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிதியமைச்சர் ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும், தினகரனின் வருகை குறித்தும், கட்சியில் அவருக்கு இருக்கும் ஆதரவு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றரை மணி நேர அமைச்சர்களின் ஆலோசனைக்கு பின் மூத்த அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். தினகரனுக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா என்பது அடுத்தடுத்து நடைபெறவுள்ள நிகழ்வுகள் மூலமாக தெரியவரும்.