டிரெண்டிங்

‘என்னால் ஊதியத்தைலாம் விட்டுக்கொடுக்க முடியாது’ - சுப்ரமணியன் சுவாமி!

‘என்னால் ஊதியத்தைலாம் விட்டுக்கொடுக்க முடியாது’ - சுப்ரமணியன் சுவாமி!

webteam

தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் 23 நாள் ஊதியத்தை பெ‌ற மாட்டார்கள் என கூறுவதை ஏற்க முடியாது என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. ப‌ட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில் ஒரு நாள் கூட அவை செயல்படவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் 23 நாள் ஊதியத்தை தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் விட்டுத்தருவர் என அமைச்சர் அனந்த் குமார் கூறியிருந்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, " நான் தினமும் நாடாளுமன்றத்திற்கு வந்து, அவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறேன். நா‌டாளுமன்றம் முடங்கியதற்கு நான் காரணமில்லை. குடியரசு தலைவரின் பிரதிநிதியாக உள்ள நான், அவர் கூறாமல் எப்படி ஊதியத்தை விட்டுக்கொடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.